ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது .தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார். ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.
Saturday, August 25, 2012
6.76 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே பாஸ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment