அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.
உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் ஆம்ஸ்ட் ராங் “நாசா” குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்து குணம் அடைந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா - பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார். சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார்.
மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment