ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் குறித்த விவரங்களை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் கமிஷனர் பிரவீண் குமார், நேற்று வீடியோ "கான்பரன்சிங்' மூலம் மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் தனி தாசில்தார்கள் உள்ளிட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் விவரங்கள் சரி பார்க்கும் பணி குறித்து ஆய்வு நடத்தினார். கடந்த தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச் சாவடி வாரியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பூத் லெவல் ஆபீசர்ஸ்) நியமிக்கப்பட்டனர். அவர்கள், தேர்தல் கமிஷன் அளித்த ஓட்டுச் சீட்டுகளை (பூத் ஸ்லிப்) வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை மேற்கொண்டனர். இப்பணியில், அந்தந்தப் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்குபின், தேர்தல் குறித்த பணியில் பி.எல்.ஓ.,க்கள் ஆண்டு முழுவதும் ஈடுபடும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அண்மையில், தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடிகளில் மாற்றங்கள் கொண்டு வந்தது. அதனடிப்படையில், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் பாகம் அடிப்படையில் மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு பி.எல்.ஓ., நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், பணி செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக, அவர்களை அடையாளம் காட்டும் வகையில், அவர்கள் வீட்டுக்கு முன் பெயர் பலகை மற்றும் அவர் கண்காணிக்கும் வாக்காளர் பட்டியல் பாகம் குறித்த விவரங்களும் அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. நேற்று வீடியோ "கான்பரன்சிங்'கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பி.எல்.ஓ.,க்கள் குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
No comments:
Post a Comment