இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 27, 2012

பணி நிரவல் 10,000 ஆசிரியர்கள் அதிரடி மாற்றம்

குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம், 10 ஆயிரம் ஆசிரியர்கள், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

விருப்பம் போல் பணி: துவக்கப்பள்ளியாக இருந்தால், 30 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஓர் ஆசிரியர்; ஒன்பது, 10ம் வகுப்புகளில், 40 மாணவருக்கு, ஓர் ஆசிரியர் என்ற வீதத்தில், பாட வாரியாக, ஆசிரியர் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியரும்; மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலைமை, பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தென் மாவட்டங்களில் காலி இடங்கள் ஏற்படுவதை கண்காணித்து, அதற்கேற்ப நடைமுறைகளை மேற்கொண்டு, அங்கே பறந்து விடுகின்றனர். இதனால், வட மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநகரங்கள் மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளில், தேவையை விட, அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த வகையில், மாணவ, மாணவியர் குறைவாக உள்ள பள்ளிகளில், 10 ஆயிரம் பேர் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்த ஆய்வுக்குப் பின், ""ஆசிரியர் இல்லாததால், மாணவர் படிப்பு பாதிக்கக் கூடாது. தேவையுள்ள பள்ளிகளில், போதிய ஆசிரியரை நியமிக்கவும், கூடுதலாக உள்ள ஆசிரியரை, மாறுதல் செய்யவும் தயங்க வேண்டாம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, முதல்வர் பச்சைக்கொடி காட்டினார். கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில், 10 ஆயிரம் ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். அனைவருமே, வட மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டும், 150 ஆசிரியர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தொடக்கக் கல்வித் துறையில், 3,200 ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் மாற்றப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறையில், 6,500 ஆசிரியர்கள் வரை, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். "அரசின் அதிரடியால், ஆசிரியர்கள் புலம்பினாலும், அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய நியமனம் எப்போது? தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறும் போது, ""தொடக்கக் கல்வித் துறையில், 3,000 இடைநிலை ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில், 6,000 ஆசிரியர்களும், விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியிடங்களில், இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், மாணவர்கள் மேலும் பலன் பெறுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment