"பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால்போதும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவர். தலைமை ஆசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பர். அனைவரும் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவர். அடுத்து தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றுவார். கொடியேற்றப்பட்டதும் அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்தி, கொடி பாடலை உரக்கப் பாடுவர். அதன்பின், தினம் ஒரு மாணவர் அன்று பத்திரிகைகளில் வந்த முக்கிய செய்திகளை வாசிப்பார். ஒரு மாணவர் திருக்குறள் கூறி அதற்குரிய பொருளை எடுத்துரைப்பார். அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏதேனும் நீதிக்கதைகளைக் கூறி அறிவுரை வழங்குவர். அதன்பின் தேசிய கீதம் பாடி, இறைவணக்கத்தை நிறைவு செய்வர். இதில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவியர், பள்ளி துவங்குவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன்பாகவே, பள்ளிக்கு வர வேண்டும். தாமதமாக வரும் மாணவ, மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் முட்டிப்போட வைத்து, எச்சரித்து வகுப்புகளுக்கு அனுப்புவார். இது தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வந்தது.
ஒரு நாள் போதும்: இது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பள்ளிக்கு வர தூண்டுகோலாக இருந்தது. தினம் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள், திருக்குறள், செய்தி வாசிப்பு, போன்றவை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதற்கு தற்போது அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் பள்ளி கல்வித் துறையிலிருந்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இறைவணக்கம் திங்கட்கிழமை மட்டும், பொதுவாக நடத்தினால் போதும். மற்ற நாட்களில் வகுப்பறைகளிலே நடத்திக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர் கூறும்போது,""இறைவணக்கத்திற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் செலவாகும். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை. இதனால் நன்மையே அதிகம். இந்த நடைமுறையை ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் நலன் கருதி, முன்புபோல் தினமும் இறைவணக்கம் நடத்த, முதல்வர் உத்தரவிட வேண்டும்,'' என்றனர்.
No comments:
Post a Comment