தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
2017-2018ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகமதிப்பீட்டிற்கான 10 மதிப்பெண்களை வழங்கும் முறை பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேல்நிலைத் தேர்வெழுதும் நேரடி தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக தனித் தேர்வர்கள், 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைய தனித் தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment