தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வு அறிவிக்கைகளின் முழு விவரங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குரூப் 1 (துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர்) தேர்வு முதல் குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு வரை நூற்றுக்கணக்கான தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது.
இந்த தேர்வுகளின் மூலமாக, அரசுத் துறைகளுக்கு பத்தாம் வகுப்புப் படித்தவர் முதல் பட்டதாரிகள் வரை ஆயிரக்கணக்கானோர் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு அறிவிக்கைகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தத் தேர்வானாலும், அதுகுறித்து அறிவிக்கைகள் வெளியிடப்படும். இந்த அறிவிக்கைகள், இரண்டு தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாவது வழக்கம். எவ்வளவு பெரிய அறிவிப்புகள் என்றாலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியிடுவதில் புதிய முறையை பின்பற்ற வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள உத்தரவு: கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் (www.tnpsc.gov.in) புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திலேயே தேர்வு அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தேர்வு அறிவிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் போது அதற்கு தேர்வர்களிடம் இருந்து நல்ல முறையில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த அறிவிக்கைகள் தொடர்பாக இணையதளத்திலேயே தேர்வர்கள் உரிய விளக்கங்களை கேட்டுப் பெறுகிறார்கள். எனவே, தேர்வு அறிவிக்கை குறித்த விரிவான மற்றும் முழுமையான விவரங்கள் இனி இணையதளத்திலேயே வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம், அந்த தேர்வு அறிவிக்கை குறித்த சுருக்கக் குறிப்பு மட்டும் நாளிதழ்களில் வெளியிடப்படும். எப்படி வரும் அறிவிக்கை: உதாரணத்துக்கு, குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை என்றால், அது ஒருசில வரிகளில் மட்டுமே நாளிதழில் தெரிவிக்கப்படும். குரூப் 1 தேர்வு மூலமாக நேரடி பணி நியமனத்தின் வழியே காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான முழு விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மட்டுமே நாளிதழ்களில் இனி விளம்பரம் வரும் என தனது உத்தரவில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்கள் பலரும், செய்தித் தாள்களில் வரும் தேர்வு அறிவிக்கைகளைப் பார்த்த பிறகே இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பம் செய்வர். ஆனால், நாளிதழ்களில் விரிவான விளம்பரத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
No comments:
Post a Comment