மாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். குழந்தைகள் தினவிழா அரசு சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:- மாணவ-மாணவிகள் 16 மணிநேரம் பெற்றோர்களிடமும், 8 மணிநேரம் ஆசிரியர்களிடமும் இருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து அவர்களுக்கு தக்க அறிவை ஊட்டிவருகிறார்கள்.
மத்திய அரசு எத்தகைய போட்டித்தேர்வை கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 73 ஆயிரம் பேர்களுக்கு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் இல்லாத இது போன்ற பயிற்சி எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் இல்லாதது. மேலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் உயர் கல்வியில் என்ன படிக்கலாம், என்ன படிப்பை படித்தால் வேலைகிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு வசதியாக விரைவில் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும். அது முழுக்க முழுக்க இலவசம்.
புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டத்தில் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை இணைத்து கொடுக்கப்பட உள்ளது. அந்த பாடத்திட்ட வரைவு வருகிற 20-ந்தேதி இணையதளத்தில் வெளியிட உள்ளோம். தமிழகத்தில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு கற்றல் குறைபாட்டை சரி செய்ய டிசம்பர் மாதத்திற்குள் பயிற்சி மையங்களை தொடங்க உள்ளோம். 32 மாவட்ட நூலகங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டில் சிம் கார்டை பொருத்த நினைத்தோம். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின் படி சிம் கார்டு இல்லாமல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.
No comments:
Post a Comment