இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 14, 2017

பள்ளி மாணவர்களுக்கு 'கலையருவி' திருவிழா : நிகழ் கல்வியாண்டு முதல் அமல்


தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளைத் தெரிந்து கொள்ளவும், அத்தகைய கலைகளைப் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாகவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை நிகழ் கல்வியாண்டு முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க முடியாத, தனக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிப்படுத்த நேரமில்லாத நிலை உள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுகளும், மன அமைதி, சிந்திக்கும் ஆற்றலுக்குத் துணை புரியும் வகையில் ஓவியம், இசை, நடனமும், மொழித் திறனை வளர்த்துக் கொள்ள கவிதை, கட்டுரை, கதை, பாடல் எழுதுதல் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, இதற்காகப் பள்ளிகளில் பாட வேளை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு நடத்தி, மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தன. காலப் போக்கில் இத்தகைய பாடப் பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் காலிப் பணியிடங்களாகவும், ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் அத்தகைய சிறப்புப் பாடங்களுக்குப் பாட வேளை ஒதுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய போக்கை மாற்ற தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், நிகழ் கல்வியாண்டு முதல் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், தமிழக கலைகளைக் கற்றுக் கொள்ளவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலை வடிவங்களில் மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், நாட்டுப்புறக் கலைகள் என சுமார் 154 -க்கும் மேற்பட்ட கலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களின் தனித் திறன், குழுத் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக, போட்டிகளைத் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு பிரிவுகளில், பள்ளிகள் அளவில் நடத்த வேண்டும். பின்னர், அவற்றில் முதலிடம் பெறுவோருக்கு ஒன்றியம், கல்வி மாவட்டம், மாவட்டம், இறுதியாக மாநில அளவில் என அடுத்தடுத்த நிலைகளில் தரமுடன் கூடிய திறனை வெளிப்படுத்துவோருக்கு அங்கீகாரமும், பரிசுகளும் அளிக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளிக் கலைத் திருவிழா வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நிகழ் கல்வியாண்டு (2017 - 18) முதல் கலைத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment