வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.
இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment