மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த எல்.முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், உரிமைகளுக்கு கல்வி நிலையங்கள் மதிப்பளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.
அவர்களையும் மற்ற மாணவர்கள் பயிலும் பொதுப்பள்ளிகளில் சேர்த்தால்தான் மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதல் பிற மாணவர்களுக்கும் ஏற்படும்’ என்று கூறியுள்ளனர். மேலும் அந்த உத்தரவில், ‘தமிழக அரசு, மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளின் ஆளுமைத்திறன், உணர்வுகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்த வேண்டும். அவர்களை தொழில் சார்ந்த செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக் கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி விசாரணையை டிசம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment