இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 20, 2017

ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: முதல்வர் வெளியிட்டார்; கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க அவகாசம்


ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய வரைவுப் பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் வரும் நவ.29-ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்கலாம்.

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கடந்த மே 22-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதையடுத்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. "தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017' உருவாக்கம் தொடர்பாக கடந்த ஜூலை 20 முதல் 22-ஆம் தேதி வரை 3 நாள்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துச் சொல்வது எப்படி? தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் படித்துப் பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை www.tnscert.org என்ற இணையதளம் வழி பதிவேற்றம் செய்யலாம். மேலும் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். இதர மொழிப் பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், செயலாளர் த. உதயச்சந்திரன், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் எம். ஆனந்த கிருஷ்ணன் மற்றும் உயர்நிலைக் குழு மற்றும் கலைத்திட்ட குழு உறுப்பினர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க. அறிவொளி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலிகள், சி.டி.க்கள் உதவியுடன்...

புதிய பாடத்திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழு வல்லுநர்கள் சிலர் கூறியது: புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஐசிடி எனப்படும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கணினி மென்பொருளின் உதவியுடன் அறிய முடியும். எழுத்துகள் உருவில் உள்ள பாடங்களைப் படிக்கும்போது அதன் பொருள் புரிந்து கண் முன் நிழலாடச் செய்யும் அளவுக்கு எளிமையான வரையறைகள், படங்கள், கார்ட்டூன்கள் இடம்பெற்றிருக்கும்.

இணையதளத்தில் புத்தகம் கிடைக்கும் வரும் கல்வியாண்டு முதல் இணையதளத்தில் ("பிடிஎஃப்' வடிவில்) பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் பெற்றோர் தங்களது செல்லிடப்பேசிகளில் கூட தங்களது குழந்தைகளின் பள்ளி புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment