மின் வாரியம் கேட்டு கொண்டதை போலவே, மின் கட்டணத்தை உயர்த்தாமல், அரசின் மானிய செலவை குறைத்து, புதிய மின் கட்டண ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஜனவரியில், ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், சென்னை, மதுரை, கோவையில், 2017 - 18க்கான மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், ஆணையம், நேற்று முன்தினம் இரவு, 398 பக்கம் புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டது. அதில், வீடு, தொழிற்சாலை உட்பட எந்த பிரிவுக்கும், மின் கட்டணம் உயர்த்தவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை. வீடுகளுக்கான மின் கட்டணத்தில், தமிழக அரசு, மின் வாரியத்திற்கு வழங்கும் மானிய செலவு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்: மின் வாரியம், வீடுகளுக்கு, 0 - 100 யூனிட்; 0 - 200 யூனிட்; 0 - 500 யூனிட்; 500 யூனிட் மேல் ஆகிய பிரிவுகளின் கீழ், மின் கட்டணம் வசூலிக்கிறது. அனைத்து பிரிவு நுகர்வோருக்கும், முதல், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
* தற்போது, 0 - 100 யூனிட் வரை, அதாவது, 100 யூனிட்டுக்குள் மின் உபயோகம் இருந் தால், ஒரு யூனிட் கட்டணம், மூன்று ரூபாய். ஆனால், இந்த பிரிவுக்கு, மின் கட்டணம் வசூலிப்பதில்லை. அதற்கான செலவை, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முன்தினம் வெளியிட்ட ஆணையில், மேற்கண்ட பிரிவு கட்டணத்தை, மூன்று ரூபாய்க்கு பதில், 2.50 ரூபாயாக குறைத்துள்ளது. இதனால், அரசுக்கு, 50 காசு மானிய செலவு குறைந்துள்ளது.
* 0 - 200 யூனிட் பிரிவில், இரு உட்பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில், 0 - 100 வரை, ஒரு யூனிட் கட்டணம், 3.25 ரூபாய். அதை, நுகர்வோரிடம் வசூலிக்காமல் அரசே செலுத்துகிறது. இரண்டாவது பிரிவில், 101 - 200 யூனிட் வரை, அதே, 3.25 ரூபாய் தான் கட்டணம். அதில், நுகர்வோர், 1.50 ரூபாய் செலுத்துகிறார். அரசு மானியமாக, 1.75 ரூபாய் தருகிறது.
முதல் பிரிவில், 3.25 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது, 2.50 ரூபாயாக குறைந்துள்ளதால், அரசுக்கு, 75 காசு செலவு குறைந்துள்ளது. இரண்டாவது பிரிவிலும், 3.25 ரூபாயாக இருந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதில், நுகர்வோர் வழக்கம் போல், 1.50 ரூபாய் செலுத்துவார். அரசு செலவு, 1.75 ரூபாயில் இருந்து, ஒரு ரூபாயாக குறைந்துள்ளது.
* 0 - 500 யூனிட் வரை பிரிவில், மூன்று உட் பிரிவுகள் உள்ளன. அதில், முதல் பிரிவான, முதல், 100 யூனிட் வரை, ஒரு யூனிட் கட்டணம், 3.50 ரூபாய். அந்த, 100 யூனிட் கட்டணத்தை, அரசு செலுத்துகிறது. இரண்டாவது பிரிவில், 101 முதல், 200 யூனிட் வரை, 3.50 ரூபாய் கட்டணம் உள்ளது. அதில், நுகர்வோர், இரண்டு ரூபாய் செலுத்துகிறார். அரசு, 1.50 ரூபாய் மானியம் தருகிறது. 201 - 500 யூனிட் உட்பிரிவில், ஒரு யூனிட் கட்டணம், 4.60 ரூபாய். அதில், நுகர்வோர், மூன்று ரூபாய் செலுத்துகிறார். அரசு, 1.60 ரூபாய் மானியம் தருகிறது. ஆணையத்தின் புதிய கட்டண ஆணையில், முதல் பிரிவில், 3.50 ரூபாய் இருந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. அதில், அரசுக்கு, ஒரு ரூபாய் செலவு குறைந்துள்ளது. இரண்டாவது பிரிவில், 3.50 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, 2.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதில், நுகர்வோர் வழக்கம் போல், இரண்டு ரூபாய் செலுத்துவார். அரசு மானியம், 1.50 ரூபாயில் இருந்து, 50 காசாக குறைந்துள்ளது. மூன்றாவது பிரிவில், 4.60 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, மூன்று ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதில், நுகர்வோர் வழக்கம் போல், மூன்று ரூபாய் செலுத்துவார். அரசுக்கு, 1.60 ரூபாய் செலுத்த தேவையில்லை என்பதால், அந்த மானிய செலவு குறைந்துள்ளது.
* ஐநுாறு யூனிட்டுக்கு மேலான பிரிவில், முதல், 100 யூனிட் கட்டணம், ஒரு யூனிட், 3.50 ரூபாயாக உள்ளது. தற்போது, அந்த கட்டணம், 2.50 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், அரசுக்கு, ஒரு ரூபாய் மானிய செலவு குறைந்துள்ளது. இவ்வாறு, ஒழுங்குறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண ஆணையில், மின் கட்டணத்தை உயர்த்தவோ, குறைக்கவோ செய்யாமல், மின் வாரியத்திற்கு, அரசு வழங்கும் மானிய செலவு மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறிதயவாது: மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் தமிழகம் இணைந்ததால், மின் வாரிய கடனில் குறிப்பிட்ட அளவை, அரசு ஏற்றது; இதனால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 2,882 கோடி ரூபாய் வட்டி சேமிப்பு கிடைத்துள்ளது. மின் வாரியமும், கடன் பத்திரங்களை வெளியிட்டு, அதிக வட்டி கடனை திரும்ப செலுத்த உள்ளது. இதனால், கூடுதலாக, 200 கோடி ரூபாய் வட்டி செலவு மிச்சமாகும். எனவே, அரசின் நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில், அது, மின் வாரியத்திற்கு வழங்கும் மானிய செலவில், 2,100 கோடி ரூபாய் வரை குறைத்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டண ஆணையில், பல அடுக்குமாடி குடியிருப்புகளில், 'லிப்ட், மோட்டார் பம்ப்' உள்ளிட்டவற்கு, தனி மீட்டர் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். -
No comments:
Post a Comment