தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. இது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றால் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேல் முறையீடு மனுவையும் ஐகோர்ட்டு நிராகரித்தது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல் முறையீடு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜூன் 27-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இதற்காக 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 14-ந்தேதி வெளியிட இருந்தது. ஆனால் மாநில அரசின் 85 சதவீத ஒதுக்கீடு அரசாணையால் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த வருடம் மட்டுமாவது ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பரிசீலிப்பதாக பிரதமரும் தெரிவித்தார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதலுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழக அரசு காத்திருக்க முடிவு செய்து உள்ளது. ஒப்புதல் கிடைத்தால் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், கிடைக்காவிட்டால் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நாளை அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தரவரிசை பட்டியல் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவ தேர்வுக்குழு தயாராக உள்ளது. 6 நாட்கள் கலந்தாய்வுக்கு பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment