பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகளில் கற்பித்தல்- கற்றல் பாதிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 5-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அலுவலக பணிகள் பாதிப்பு: போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, கிராமநிர்வாகம், கல்வித்துறை என அரசுத்துறை சார்ந்த பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம், எழிலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கற்றல்-கற்பித்தல் நடைபெறவில்லை: அரசுப் பள்ளிகளில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் மட்டும் அரசுப் பள்ளிகளில் பணியில் ஈடுபட்டனர். எனினும் கற்றல், கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மாவட்டங்களில்... பல மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவுப் பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
போராட்டங்கள் தொடரும்... வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ. கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அடுத்தடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்...தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பின்னரும் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment