தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்பட வேண்டிய ரூ.2,248 கோடியை விரைந்து அளிக்குமாறு அமைச்சர் ஜாவடேகரை நேரில் சந்தித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார். அரசுப் பள்ளிகளில் தூய்மையைப் பேணுவதற்காக தேசிய அளவில் சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து விருது வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தில்லி வந்தார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை அவர் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:
பள்ளிகளில் கழிப்பிட பராமரிப்பு, தூய்மையைப் பேணுதல் ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது (இரண்டாமிடம்) தில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது. அந்த விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மற்றபடி எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் தில்லி வரவில்லை. தமிழக கல்வித் துறைக்கான நிதியைப் பெறுவது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை சந்தித்துப் பேசினேன். அப்போது, தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.2,248 கோடியை விரைந்து அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அந்த நிதியை ஒதுக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறினார். நீட் தேர்வு: இனி வரும் காலங்களிலும் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். மேலும், 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் பள்ளிக் கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நடத்தப்படும் 'நீட்' தேர்வு தொடர்பாக ஆராய்ந்து 54 ஆயிரம் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்தகைய தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றார் செங்கோட்டையன். பேட்டியின் போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உடனிருந்தார். நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு: முன்னதாக, மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'இது அரசியல் ரீதியிலான சந்திப்பு அல்ல. நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் சந்தித்துப் பேசினேன். மற்றவர்கள் சந்திப்பு குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்றார் அவர்.
No comments:
Post a Comment