காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணி விரைவாக முடிவடையும் விதமாக, இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நிபுணர் குழுக்களில் இடம்பெற்றுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர்களை மாற்ற தடைவிதித்தார். மேலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
எந்த அச்சமும் இல்லாமல் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பாடத்திட்டம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்படும். இதற்காக செப்டம்பர் முதல் வாரத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய வரைவு பாடத்திட்டம், செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.
அந்த புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கருத்துகேட்பு பெட்டிகள் வைக்கப்படும். இதைதொடர்ந்து, அக்டோபர் 2-வது வாரத்தில் மாநில பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, 3-வது வாரத்தில், பாடப்புத்தகத்தை எழுதும் குழுவினர் மத்தியில், பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப்படும். பின்னர், 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் எழுதும் பணி அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்படும். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பாடப்புத்தகங்கள் வடிவமைக்கும் பணியும், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.
மே முதல் வாரத்தில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே முதல் வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்களை அச்சிட்டு, 2020-ம் ஆண்டு மே முதல் வாரத்தில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கை செப்டம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment