தமிழகத்தில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்திய குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கு பயிற்சிக்கு மாணவர்களை சேர்த்திட நுழைவுத் தேர்வு நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களின் மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மேலும் WWW.CIVILSERVICECOACHING.COM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், நேரில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. (ஆன்லைன் மற்றும் ஆப்லைன்) இரண்டிலும் விண்ணப்பித்தால் இரண்டும் நிராகரிக்கப்படும்.
தேர்வு எழுத தகுதியுடையவர்கள் உரிய விண்ணப்பங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ஆகஸ்ட் 21 காலை 10 மணி முதல் செப்டம்பர் 20 மாலை 5.45 வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 20 மாலை 5.45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்: பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிஇ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி அக்ரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகள். வயது வரம்பு: தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் 21 முதல் 37 வயது வரையிலும், சிறுபான்மையினர், சீர்மரபினர் 21 முதல் 35 வரையிலும், இதர வகுப்பினர் 21 முதல் 32 வரையிலும் விண்ணப்பிக்கலாம். இதில் கல்வி, ஜாதி, வயது சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து, விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment