ஆசிரியர் சங்கங்கள் தொடங்குவதைத் தடை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 20 கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு கடந்த ஜூன் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் விவரம்:
முன்பு அரசுப் பள்ளிகளில்தான் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகளவில் இருந்தன. அப்போது, பெரும்பான்மையாக மிஷனரிகள்தான் தனியார் பள்ளிகளை நடத்தி வந்தன. தற்போது, தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளன. இந்தப் பள்ளிகளில் கல்வித் தரம், செயல்பாடு, ஒழுக்கம் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர். முன்பு, சமூகக் கண்ணோட்டத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த நோக்கமே இல்லாமல் போய் விட்டது. அரசுப் பள்ளிகள் பற்றிய பொதுமக்களின் பார்வையும் மாற வேண்டும். மாநில அரசின் கல்வி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்தால்தான் ஆங்கிலப் புலமை கிடைக்கும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது. இது தவறான புரிதல். தமிழகத்தில் 64.16 சதவீதத்தினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 35.84 சதவீதத்தினர் மட்டுமே படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 2017 - 18-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நவீன வகுப்புகளை ('ஸ்மார்ட் க்ளாஸ்') தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 90 உயர் நிலைப் பள்ளிகளிலும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளிலும், ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் அதி நவீன ஆய்வகங்கள் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற உயர் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்.
ஆனால், ஆசிரியரும் ஒரு பெற்றோர் தான். அந்த வகையில், அவர்கள் விருப்பப்படி குழந்தைகள் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அந்த உரிமை அடிப்படை உரிமையும் கூட. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே நீதிமன்றத்தின் கருத்து நினைவாகும். தற்போதுகூட, பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 19 ஆயிரத்து 716 பட்டதாரி ஆசிரியர்களும், 11 ஆயிரத்து 459 இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவறிழைக்கும் ஆசிரியர்களிடம் மெமோ கொடுத்தல், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இது தவிர, தொடர்ந்து கடமையைச் செய்யத் தவறுவோருக்கு எதிராக இடைநீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைககளும் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 32 மாவட்டங்களிலும், கடந்த 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை, சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராத 300 ஆசிரியர்கள் மீதும், கடமை தவறியதாக 610 ஆசிரியர்கள் மீதும் என மொத்தம் 910 ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்லிடப்பேசிகள் பயன்படுத்தத் தடை விதித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் சங்கம் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, ஆசிரியர்கள் சங்கம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பிற அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள் ஆசிரியர்களுக்கு மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது, பாரபட்சமானது. தேவைகள், குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு பெற சங்கங்கள் அவசியம். ஜனநாயக சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவும் சங்கம் அமைக்க உரிமை உள்ளது. தடை விதிப்பதால், எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. அப்படித் தடை விதித்தால் அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் கவனிக்கக் கூடும் என்பதால் ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளதாக நீதிபதி எழுப்பிய 20 கேள்விகளுக்கு விரிவான பதிலை கல்வித்துறை அளித்துள்ளது.
No comments:
Post a Comment