தமிழகத்தில் 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் பச்சை கார்டுகள் அரிசி கார்டாகவும், வெள்ளை கார்டு சீனி கார்டாகவும், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கார்டுகள் எப்பொருளும் வேண்டாத ‘என்’ கார்டகாவும், காக்கி கலர் கார்டு போலீசாருக்கான ரேஷன் கார்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.76 கோடி கார்டு அரிசி கார்டாக உள்ளது. இந்த கார்டுகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 20 கிலோ அரிசி (புழுங்கல் அரிசி 17 கிலோ, பச்சை அரிசி 3 கிலோ வீதம்) வழங்கப்படுகிறது.
மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு, மாநிலத்திற்கு வழங்கும் உணவு பொருளுக்கான மானியத்தை குறைத்தது. இதனால் மாநில அரசுகள் அதிக நெருக்கடியை சந்திக்க துவங்கின.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரிசி கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க மாநில உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் விற்பனை ஆன்லைனில் இணைக்கப்பட்டது. இதற்காக விற்பனை முனையம் (பிஓஎஸ்) என்ற கம்ப்யூட்டர் கருவி ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைனில் பில் போடப்படுகிறது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், செல்போன் எண்ணை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 70 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். மீதி 30 சதவீதம் பேர் ஆதார் எண் பதிவு செய்யவில்லை. ஆதார் பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளை சென்னையில் உள்ள மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் கடந்த மாதம் 25ம் தேதி தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
ரேஷன் கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் சரியாக கார்டுதாரர்களின் ஆதார் எண், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். பின் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, சொந்த வீடு உள்ளதா, ஒத்தி வீடா, கார் வசதி உள்ளதா, அரசு பணியில் உள்ளவரா, மாதம் சம்பளம் ரூ.1 லட்சத்திற்கு மேல் வாங்குபவரா என கணக்கு எடுக்கப்பட உள்ளது. தற்போது இவர்களுக்கு அரிசி கார்டு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்படி இவற்றில் ஏதேனும் ஒரு வசதி இருந்தாலும் அரிசி கார்டு ரத்து செய்யப்பட உள்ளது. ரத்து செய்யப்படும் அரிசி கார்டுக்கு பதில் சீனி கார்டு வழங்கப்படும். இப்பணியை வரும் வாரத்தில் துவக்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அரிசி கார்டு எண்ணிக்கையை குறைக்க மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இதில் விஏஓ, கிராம தலையாரி, அங்கன்வாடி பணியாளர்கள், பில் கலெக்டர்கள் ஈடுபட உள்ளனர். இப்பணிக்கான ஊதியம் தரப்படமாட்டாது என உணவுத்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். வருவாய்த்துறையினரின் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக ஒரு மாவட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதாது. இந்த நிதியை எப்படி பிரித்து பணியாளர்களுக்கு கொடுத்து வேலை பார்க்க சொல்வது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் நிதி ஒதுக்க கோரியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரிசி கார்டு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இலவச அரிசி திட்டத்தால் அதிக செலவு ஆகிறது. இதனை குறைக்க வேண்டும். இதனால் அரிசி கார்டுகள் தற்போது உள்ள எண்ணிக்கையை விட 30 சதவீத கார்டுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சொந்த வீடு, ஒத்திக்கு வீட்டில் குடியிருப்போருக்கும் அரிசி கார்டு இனிமேல் இல்லை. இந்த கணக்கீடு அடிப்படையில் பல சலுகையை இவர்கள் இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment