செல்லிடப்பேசியில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு செல்லிடப்பேசியில் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பயிற்சிகள் அளிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.
செல்லிடப்பேசிகள் தயாரிப்பில் வெளிநாட்டினரே முன்னணியில் இருப்பதால் அவை பெரும்பாலும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டே அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் அப், முகநூல்கள் மூலமாக வரும் லிங்க்குகளை (வலைதள முகவரிகள்) நேரடியாகத் திறந்து பார்ப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படாதவாறு பாதுகாக்க முடியும்.
ஏடிஎம் அட்டைகளுக்கான கடவுச் சொற்களை ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைக்கும்போது அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த கடவுச்சொல் நமக்கும் மட்டுமே புரியும் வகையிலான குறியீட்டை மட்டும் எழுதி வைக்கலாம்.
குழந்தைகள்- மனைவியின் பிறந்த தினம், நெருங்கிய நண்பரின் பெயர் போன்றவற்றை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இணைய வழி வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) மேற்கொள்ளும்போது கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஆல்ஃபா நியூமரிக் எனப்படும் ஆங்கில எழுத்துகள்- எண்களுடன் கூடிய கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது சிறந்தது. எந்தவொரு இணையப் பரிவர்த்தனைக்கும் பற்று அட்டையைக் (டெபிட் கார்டு) காட்டிலும், கடன் அட்டையைப் (கிரடிட் கார்டு) பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும். ஏனெனில் கடன் அட்டைகள் காப்பீடு பெற்றிருப்பதுடன் அந்த அட்டையைப் பயன்படுத்தும்போது ரகசியக் குறியீடுகள் களவாடப்படாத பொறுப்பை வங்கிகளும் கண்காணிக்கின்றன.
அமெரிக்காவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் கடன் அட்டையால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு சான்றாகும்.
அதேபோன்று வங்கிப் பரிவர்த்தனைகளை அதிகளவில் மேற்கொள்வோர் இரு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது சிறப்பான ஒன்று. இதைத் தொடர்ந்து பரிவர்த்தனைகளை பிரதான அல்லது அதிக பணமிருக்கும் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளாமல் கூடுதல் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
பி.ஓ.எஸ். எனப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் பற்று, கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும்போது அதில் நமது வங்கிக் கணக்கின் ஐ.எஃப்.எஸ். குறியீடு காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடைகள், பெட்ரோல் நிலையங்கள் என எந்தப் பரிவர்த்தனைக்கு அட்டைகளைப் பயன்படுத்தினாலும் அதற்குரிய கடவுச் சொல்லை நாம் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment