திடீர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால், அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நாளை நடக்குமா என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப் படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, இரண்டாம் பருவ தேர்வு, டிச., 5ல், துவங்கியது; டிச., 23 வரை நடக்கிறது.
'பிளஸ் 2வுக்கு, நேற்றும்; 10ம் வகுப்புக்கு, நாளையும் அரையாண்டு தேர்வு துவங்கும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால், டிச., 6 முதல், இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று தேர்வு துவங்கவில்லை.
வெளியிடவில்லை
விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'திட்டமிட்டபடி, 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்குமா; நேற்று துவங்க இருந்த, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு எப்போது துவங்கும்' என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிடவில்லை.
திடீர் விடுமுறையால், ஏற்கனவே அறிவித்த தேதியில், தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வங்க கடலில், புயல் சின்னம் மிரட்டுவதும், தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய அட்டவணை
விடுமுறைக்குப்பின், உடனடி தேர்வு மாணவர்களுக்கு சிக்கலாகும் என, ஆசிரியர்கள்
கூறுகின்றனர்.'எனவே, புதிய தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும். டிச., 10 அல்லது 12ல், தேர்வை துவங்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் 'அலர்ட்'
தனியார் பள்ளிகளில், டிச., 5ல் தேர்வு துவங்கியது. 'விடுமுறை நாட்களில் நடக்கவிருந்த தேர்வுகள், புதிய தேதியில் நடத்தப்படும். மற்ற தேர்வுகள்
ஏற்கனவே அறிவித்த தேதியில் நடத்தப்படும்' என, அறிவித்துள்ளது.
இத்தகவல்கள் பெற்றோருக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில்' வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் விடுமுறையை வீணாக்காமல், தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
No comments:
Post a Comment