ரூ.500, 1000 பழைய ரூபாய் நோட்டுகளுக்கான சலுகை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இனி வங்கிகளில் மட்டுமே அவற்றை டெபாசிட் செய்ய முடியும். செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை சுங்கக்கட்டணம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், குடிநீர் மற்றும் மின்கட்டணங்கள், பஸ் டிக்கெட்டுகள் வாங்க, ரயில் முன்பதிவு நிலையங்களில் டிசம்பர் 10ம்தேதி வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெட்ரோல் பங்க்குகளில் டிசம்பர் 2ம்தேதியுடனும், ரயில் முன்பதிவு மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பயன்படுத்துவது கடந்த 9ம்தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு திடீரென அடுத்தடுத்து அறிவித்தது. இதற்கிடையே, 1000 ரூபாய் நோட்டுகள் எங்கும் பயன்படுத்த முடியாது என்று டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் பழைய 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், குடிநீர் கட்டணம், மின் கட்டணம், மருந்தகங்கள், மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற இடங்களிலும், அரசு கட்டணங்களை செலுத்துவதற்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்ற காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
எனவே, இனி பழைய ரூபாய் நோட்டுகளை எங்கும் பயன்படுத்த முடியாது. வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்யலாம். இதனால் பொதுமக்கள் மீண்டும் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே வங்கிகளில் பணம் இல்லாததால் டெபாசிட் செய்த பணத்தையும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே, காலக்கெடுவை டிசம்பர் 30ம்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment