தகவல்களை பரிமாறிக்கொள்ள சம்பந்தப்பட்ட நபரை பல கிலோ மீட்டர் கடந்து சென்று பார்க்க வேண்டிய சூழலை மாற்றியது கம்பி வழி தொலைபேசி. அதிலிருந்தும் மாற்றியது செல்போன். இன்று செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். சிலர் 2, 3 செல்போன்களை வைத்திருக்கின்றனர். இந்த செல்போனின் அபார வளர்ச்சி காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக் மட்டுமின்றி நேரில் சந்திப்பதை போன்று வீடியோ அழைப்புகளிலும் நினைத்தவுடன் பேசிக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது. ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இல்லாத வீடுகளே கிடையாது. அறிவு சார்ந்த தகவல்கள் எது வேண்டுமானாலும் புத்தகத்தை புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. செல்போன் மூலம் இணையதளத்தில் உலக விஷயங்கள் கையடக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் செல்போன்களை அறிவுசார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட அழிவு சார்ந்த விஷயங்களுக்கு அதிகப்படியானோர் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் வேதனை. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சராசரியாக வாரத்துக்கு 48 மணிநேரம் ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்பதே இதற்கு சாட்சி.
இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆங்காங்கே வாட்ஸ் அப், காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என குனிந்த தலை நிமிராமல் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களையும் கவனிக்காமல் செல்போன்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் சிறிய பிரச்னைகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு சந்திக்கும் மனநிலை மாறிவிடுகிறது. சாதாரண பிரச்னைக்கே தற்கொலை, வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவது போன்ற மனநிலைதான் மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. இந்த செல்போன் பயன்பாடு வீட்டிலும், வெளியே நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் என்று நின்றுவிடாமல் பள்ளிகளில் வகுப்பறையிலும் தொடர்வதுதான் இதைவிட கொடுமை. வகுப்பில் நடத்தும் பாடங்களையும் கவனிக்காமல் செல்போன்களில் கவனத்தை செலுத்துகின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும், ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி செல்போன் பயன்பாடு இல்லாமல் இருக்கின்றனரா? என்பது கேள்விக்குறிதான்.
இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களால் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் கிராமத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளியில் படிக்கும் சிறுமியை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது கொலை செய்தான். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் மனித உரிமைகள் கழகத்துக்கு அனுப்பிய அறிக்கையில், ‘அந்த மாணவன் அடிக்கடி செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததால் அவனது மனநிலை மாறியுள்ளது. எனவே, தேவையான கவுன்சலிங் அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேலும் போலீசார் விசாரணையில், பள்ளி அருகில் உள்ள இணையதள மையத்தில் அதன் உரிமையாளர்தான் பள்ளி மாணவனுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் வகுப்பில் ஆபாச படம் பார்த்த தனியார் பள்ளி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மது குடிக்கும்போது அதை அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டு சிக்கியது. இப்படி தினமும் செல்போன்கள் பயன்பாட்டால் மாணவ, மாணவிகள் சீரழிவது தொடர்கதையாகவே இருக்கிறது.
பெரும்பாலும் மாணவர்களுக்கு பெற்றோர் செல்போன்களை வாங்கி கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்களே பள்ளிக்கு செல்லாமல் எங்காவது வேலைக்கு சென்று செல்போன் வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதவிர திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களிலும் மாணவர்கள் ஈடுபட வழிவகுத்துள்ளது இந்த செல்போன் மோகம். மாணவர்கள் அதிகப்படியான நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். எனவே, இதை ஆசிரியர்களே கண்காணிக்க வேண்டியுள்ளது. வகுப்பிற்கு செல்போன் கொண்டு வந்தால் அதை முறைப்படி பறிமுதல் செய்யவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் கல்வி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி எதிர்கால சமுதாயத்தை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment