நடப்பு நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8 சதவீதமாக தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-16 நிதி ஆண்டிலும் இதே வட்டி விகிதம் இருந்தது.
பிஎப் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதற்காக, அறங்காவலர் குழு கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது.
பிஎப் அமைப்புக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.39,084 கோடி வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 8.8 சதவீதம் வட்டி கொடுக்கும் பட்சத்தில் 383 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். மாறாக 8.7 சதவீதம் வட்டி கொடுக்கும் பட்சத்தில் ரூ.69.34 கோடி உபரி ஏற்படும். ஆனால் ஏற்கெனவே உபரியாக இருக்கும் தொகையை பயன்படுத்தி 8.8 சதவீத வட்டி வழங்க பிஎப் அமைப்பு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்காக வட்டி விகிதம் கடந்த செப்டம்பரில் 0.1 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு குறைத்தது.
அதனால் பல முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தது. இதற்கு இணையாக வட்டி கொடுக்க பிஎப் அமைப்பிடம் மத்திய அரசு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிஎப் அமைப்பு 8.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. தவிர நிர்வாக செலவுகளை 0.85 சதவீதத்தில் இருந்து 0.65 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மீதமாகும். முன்னதாக கடந்த நிதி ஆண்டில் வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்குப் பிறகு 8.8 சதவீதமாக வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment