ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கு புதிய வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஐஆர்சிடிசி புதிய ஆப் ஒன்றை அகிமுகப்படுத்தியது. அதன்மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதுபோன்று, ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வேயில் புதிய வசதிகளை ரயில்வேதுறை அறிவித்து வருகிறது. முன்பு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் நின்று முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின், இணையம்வழியாக முன்பதிவு செய்யும் வசதி வந்தது. பின்பு, ரயில்வே ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் இணைய வசதி தேவை.
இனி, ரயில் டிக்கெட் முன்பதிவுசெய்ய யாரும் இன்டெர்நெட்டை தேடியோ அல்லது ரயில் நிலையத்துக்கோ அலைய வேண்டாம். ‘139’ என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்வகையில் சிறந்த சேவையை ரயில்வே துறை அறிமுகப்படுதியுள்ளது. இதற்கு வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த புதிய சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர், எத்தனைபேர் பயணம் செய்ய இருக்கிறார்கள், பயணத் தேதி, எந்த வகுப்பில் பயணிக்க வேண்டும், பெயர், வயது, ரயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதையடுத்து, ரயில்வே துறையிடமிருந்து கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று, நமது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின், பணப் பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும். அதை உறுதிசெய்தால், கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். இதன்மூலம், எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையம்மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1௦ லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் இந்த புதிய சேவைக்கும் பொருந்தும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இணைய வசதி இல்லாமல் சாதாரண அலைபேசி வைத்திருப்பவர்களுக்கும், மின்னணு பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் இந்த வசதியை கொண்டுவந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment