வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள் என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது.
ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள் செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது. படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். ஆகஸ்டு வரை கால நீட்டிப்பு மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களை தெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment