அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் மற்றும் அதிக தேர்ச்சி பெற, கண்காணிப்பு குழு அமைப்பது உட்பட, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளத் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை உட்பட, பல துறைகளின் கட்டுப்பாட்டில்செயல்படுகின்றன.
ஆனாலும், மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலில், இந்தப் பள்ளிகளில் கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும், மாணவ, மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மிக மோசமாக உள்ளன. மொத்த தேர்ச்சி விகிதம், மாநில, 'ரேங்க்' பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தரத்துடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கல்வித் தரம், சராசரி நிலைக்கும் கீழே செல்கிறது. பல கோடி ரூபாய் செலவில், 14 இலவச திட்டங்கள் அளித்தும், கல்வித்தரம் மோசமாக இருப்பதால், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும், குறைந்த மதிப்பெண் பெற்ற தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், புதிய அதிரடி திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:
* தேர்ச்சி மற்றும் மதிப்பெண் குறைவான பள்ளிகளில், சிறந்த ஆசிரியர்களை நியமித்தல் அல்லது சிறப்பு பயிற்சி அளித்தல்.
* அனைத்து அரசு பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் மாதாந்திர முன்னேற்றம், ஆசிரியர்களின் முயற்சிகளைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் குழு அமைத்தல்.
* மாணவ, மாணவியருக்கு, பெற்றோர் -ஆசிரியர் கழக வினா வங்கிகள் மற்றும், 'பயிற்சி கட்டகம்' என்ற சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல்.
* வகுப்பில் முன் இருக்கை மற்றும் பின் இருக்கையில் அமரும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமமான கற்பித்தல் வாய்ப்புக் கிடைக்கும் வகையில், மாணவர்கள் வரிசையை மாற்றி பாடம் கற்பித்தல்; அடிக்கடி திருப்புதல் தேர்வு நடத்துதல்; புத்தகத்தின் பின்பக்கமுள்ள வினாக்களை கண்டிப்பாக படிக்க வைத்து, அவற்றுக்கு வகுப்பறை தேர்வு நடத்துதல்.
* சராசரி மற்றும் கற்றல் குறைந்த மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோருடன் ஆலோசித்து, சிறப்புப் பயிற்சி அளித்தல். இப்படி பல புதிய திட்டங்களை, இந்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment