பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. பலருக்கு, ஓய்வூதியமே கைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. 50 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த, 2004 ஏப்ரல் முதல், மத்திய அரசும்; 2003 முதல், தமிழக அரசும், சி.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்தன. இதன்படி, 2003க்குப் பின், பணியில் சேர்ந்த ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு, சி.பி.எஸ்., திட்டப்படி, மாத அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதன்படி, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்துகின்றனர். இவர்களில், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பொதுக் கணக்கு அலுவலகம்; தொடக்கப் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை அரசு தகவல் தொகுப்பு மையத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் பராமரிக்கப்படுகிறது. இதில் தான், சில ஆண்டுகளாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்க மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பதவி உயர்வு பெற்று, பள்ளிக் கல்வித்துறையின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வோருக்கு, பழைய பங்களிப்பு கணக்கு எண் கைவிடப்பட்டு, பொதுக் கணக்கு அலுவலகத்தில் புதிய எண் துவங்கப்படுகிறது.இதனால், ஏற்கனவே பல ஆண்டுகள் பணம் கட்டிய, அந்த ஓய்வூதியக் கணக்கு அம்போவென விடப்படுகிறது;
அந்த நிதி எங்கே என, தெரியவில்லை. அச்சம் இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:இந்த கணக்கு எண்களை ஒன்றாக இணைக்கும்படி, அரசுக்கு பல முறை மனு கொடுத்த பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஓய்வுபெற்றவர்கள், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. பலருக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்தவே ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார். ரூ.5,000 கோடிசெலுத்தப்படவில்லை 'தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 5,000 கோடி ரூபாயை, தமிழக அரசு இன்னமும், மத்திய அரசிடம் செலுத்தவில்லை' என்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியம் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற, திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம், புதிய திட்டத்தில் பிடித்த, பணத்தை சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் செலுத்தி விட்டன. தமிழக அரசு, ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், எதுவும் கொடுக்கப்படவில்லை. திட்டம் துவங்கி, 12 ஆண்டுகளாகியும், பணம் செலுத்தாதது, தற்போது வெளிப்பட்டுள்ளது. இனிமேலாவது, அரசு பணத்தைச் செலுத்தி, திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்
No comments:
Post a Comment