வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்த, இறந்தவர்களின் தகவல்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகைகளில் அந்த விவரங்கள் ஒட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தமிழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தகவல் பலகையில் ஒட்டப்படும்: இந்தப் பணியின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் 16.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், அந்த இடத்தில் இல்லாதவர்கள், இடத்தை வேறொரு இடத்துக்கு மாற்றியவர்கள், இறந்தவர்கள், பல இடங்களில் பெயர் பதிவு போன்றவற்றை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தப் பணிகளை ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தையும் தொகுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரியின் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி ஒட்டப்பட உள்ளது. ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள இறந்த, இடமாற்றம் செய்த வாக்காளர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் (ஆட்சியர் அலுவலகம்) அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், இதற்கான தகவல்கள் அடங்கிய குறுந்தகடு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும். அத்துடன், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் (www.elections.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment