குரூப் 2 பதவியில் அடங்கிய 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது. சுமார் 6.2 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு உடையது) அடங்கிய 8 உதவி வணிக வரி அதிகாரி, சார்பதிவாளர் கிரேடு 2 (காலி பணியிடம் 23), ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி (18), லோக்கல் பண்ட் ஆடிட் டிபார்ட்மென்ட் உதவி ஆய்வாளர் (78), இந்து சமய அறநிலையத்துறை ஆடிட்டிங் ஆய்வாளர் (28), கூட்டுறவுத்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் (333), வேளாண்மை துறை மார்க்கெட்டிங் ஜூனியர் கண்காணிப்பாளர் (72), வருவாய் உதவியாளர் (618) உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் அடங்கிய 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
இதற்காக, விண்ணப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு போட்டிப்போட்டு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 292 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 114 மையங்களில் இந்த எழுத்து தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு (டிகிரி தரம்) 150 மதிப்ெபண்ணும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 150 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும். இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஓரிரு நாட்களில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment