மத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில், சி.சி.இ., என்ற செயல்முறை வழி கற்றல் அமல்படுத்தப்படுகிறது.
அதேநேரம், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வரையிலான மாணவர்களுக்கு, சிறப்புப் பாடங்களும் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கைவினை போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இதற்காக, 22 ஆயிரம் ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் சரியாக வழங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் காணாமல் போனதாகவும், தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம் புகார் அளித்தது. இந்தப் புகாரை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி, புதிய பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைத்துள்ளது.
இதில், ஒவ்வொரு பாடவாரியாகவும் கவின் கலைக்கல்லுாரி பேராசிரியர், கலை ஆசிரியர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினரின் பாடத்திட்ட தயாரிப்புப் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில், இணை இயக்குனர் குப்புசாமி மேற்பார்வையில் பாடத்திட்ட தயாரிப்பு நடக்கிறது.புதிய பாடத்திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாகவும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையிலும், காலத்துக்கு ஏற்ற பல புதுமைகளுடன், சிறப்புப் பாட வழிகாட்டு பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment