பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளை போல் இந்தாண்டும் கலந்தாய்வு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பும், போராட்டங்களும் நடத்தின. இந்நிலையில், இந்தாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளை ஜூலை 14ல் கல்வித்துறை வெளியிட்டது.
இதில், குறைந்தது ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியோருக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்விற்கு முன் நிர்வாக அடிப்படையில் துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி முதலில் நிர்வாக மாறுதலை மேற்கொள்ளலாம் உட்பட சில நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் புதிய நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கலந்தாய்வில் பங்கேற்க 'ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற நிபந்தனையை தளர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள் எதிர்க்கும் சில நிபந்தனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முடிவில் 'மூன்று ஆண்டுகள்' என்பதை 'ஓராண்டு' என குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு இரண்டு நாளில் வெளியாகும். ஜூலை 31 முதல் ஆக.7 வரை கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெற வலியுறுத்தினர். ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment