பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் (நெட்) பழைய நடைமுறையையே பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
பேராசிரியர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "நெட்' தேர்வை சீர்திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் டி.என். ரெட்டி தலைமையிலான இரு நபர் குழு, பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. அதில், இப்போது நடைமுறையில் உள்ள முழுவதும் கொள்குறி தேர்வு கேள்வி, பதில் முறைக்கு பதிலாக எழுத்துத் தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது. விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது. தவறான பதில்களுக்கு "நெகடிவ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்வது என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டன.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்த யுஜிசி, அதுதொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. மேலும், 2014 டிசம்பர் மாத "நெட்' தேர்விலேயே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் யுஜிசி அதிகாரிகளும் தெரிவித்தனர். ஆனால், டிசம்பர் மாதத் தேர்வில் பழைய நடைமுறையே பின்பற்றப்பட்டது. இந்த நிலையில், யுஜிசி கவுன்சில் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்றது. இதில் "நெட்' தேர்வு நடைமுறை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், தேர்வில் தொடர்ந்து பழைய நடைமுறையையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
தகுதித் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்த நிலையில், எழுத்துத் தேர்வு முறையை அறிமுகம் செய்தால், விடைத் தாள்களை திருத்த அதிக நேரம் தேவைப்படும் என்பதோடு பல்வேறு சிக்கல்களும் எழ வாய்ப்பு உள்ளது என்பதால் பழைய நடைமுறையையே தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற யுஜிசி அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment