ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, நான்கு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
காப்பீடு திட்டம்: வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு; வாரத்தில், ஐந்து நாட்கள் வேலை; வரையறுக்கப்பட்ட வேலை நேரம்; காப்பீடு திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், நவம்பர் முதல், மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஜனவரி, 21, முதல், 24ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். வங்கிகள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனால், வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே, மும்பையில் உள்ள வங்கிகள் சங்கத்தில், நேற்று மதியம், மீண்டும் பேச்சு நடந்தது. இதில், '13 சதவீதத்துக்கு மேல், ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என, வங்கிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பினர், '19.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, வரும், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தோல்வி அடைந்ததால்...: இதுகுறித்து, கூட்டமைப்பின் துணை செயலர் சீனிவாசன் கூறியதாவது: ஊதிய உயர்வு பேச்சு தோல்வி அடைந்ததால், நான்கு நாள் வேலை நிறுத்தத்தை மீண்டும் அறிவித்துள்ளோம். இதன் பின்பும், ஊதிய உயர்வு அளிக்க, வங்கிகள் சங்கம் முன்வரவில்லை எனில், மார்ச், 16 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment