சிறந்த ஆசிரியருக்கு வழங்கப்படும், "ராதாகிருஷ்ணன் விருது'க்கு, வரும், 23ம் தேதிக்குள், 360 ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்விப் பணியை சிறப்பாக செய்யும் ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு, விருதுகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றன.
தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், விருதுகளையும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வழங்கி, ஜனாதிபதி கவுரவிக்கிறார். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகள், தனியாக, விருதுகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கி, கவுரவிக்கிறது. அந்த வகையில், 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, செப்., 5ல், ஜனாதிபதி, விருதுகளை வழங்க உள்ளார். இதற்கிடையே, தமிழக அரசின் சார்பில், "ராதாகிருஷ்ணன் விருது'க்கு, 360 ஆசிரியர், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட அளவில், தற்போது பரிசீலனையில் உள்ள ஆசிரியர் பட்டியல், அடுத்த வாரத்தில், கல்வித் துறைக்கு வந்துவிடும்
. பின், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில குழு கூடி, தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. வரும், 23ம் தேதிக்குள், 360 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு விடுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செப்., 5ம் தேதி, சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்கு வசதியாக, ஒரு வாரத்திற்கு முன்பே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடிதம் அனுப்பப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment