அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம் இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படும்.
எனவே, அதுவரை, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள கணக்கு, தற்காலிக நிலையில் இருக்கும். திட்டம் முடிந்தபின், பொது சம்பள கணக்கிற்கு, ஆசிரியர்கள் மாற்றப்படுவர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., நிதியில் இருந்து, சம்பளம் வழங்குவதற்கு வசதியாக, பள்ளி கல்வித் துறை சார்பில், அரசாணை பிறப்பிக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அரசாணை, 2011 உடன் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அரசாணை இல்லாமல், ஒன்றரை ஆண்டுகளாக, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அரசாணை இல்லாததை காரணம் காட்டி, "நடப்பு மாதத்திற்கு, சம்பளம் வழங்க முடியாது' என, ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார். இதை, சார் கருவூல அதிகாரிகளும், தெரிவித்துள்ளனர். இதனால், அம்மாவட்டத்தில் பணிபுரியும், 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல், பல்வேறு மாவட்டங்களில், "சம்பளம் வழங்க முடியாது' என, கருவூல அதிகாரிகள், கை விரித்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரமண்ட் பேட்ரிக் தெரிவித்தார். பேட்ரிக், மேலும் கூறுகையில், "
"இந்த பிரச்னையை, தொடக்க கல்வித் துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஓரிரு நாளில், பிரச்னையை தீர்ப்பதாக, இயக்குனர் உறுதி அளித்துள்ளார்,'' என, தெரிவித்தார்.
No comments:
Post a Comment