மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் இணைந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் இடத்தை முடிவு செய்வார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் அதிகளவில் தொடர்ந்து தோல்வியடைகின்றனர். இதையடுத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் முடிவு எடுத்தது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் தரப்படும். மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளை எப்படி எளிமையாகப் புரியவைப்பது, அந்தப் பகுதி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதன் நோக்கம், தேர்வில் அந்தப் பகுதியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 2 கல்லூரி பேராசிரியர்கள், 2 மூத்த முதுநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் என 5 பேர் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கப்பட்டது.
இவர்களின் மூலம் இப்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயிற்சியின் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதோடு, கற்பித்தலில் புதிய உத்திகளையும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அறிந்துகொள்வார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். பின்தங்கிய மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு: கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, அந்தப் பயிற்சி வகுப்பறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment