ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 27 தேர்வு மையங்களில் 9,056 பேர் எழுதுகின்றனர்.
இரண்டாம் தாள் தேர்வை 75 தேர்வு மையங்களில் 26,043 தேர்வர்கள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தகுதித் தேர்வைக் கண்காணிக்க 100 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க இதில் முடிவு செய்யப் பட்டது. இந்தக் கூட்டத்தில் தேர்வு மையங்கள், வினாத்தாள் காப்பு மையங்களில் காவல்துறை பாதுகாப்பு, தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம், தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு, கூடுதல் பஸ்கள் இயக்குதல் போன்றவை தொடர்பாக அந்தந்த துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment