"புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், தேசிய மக்கள் தொகை பதிவுக்கான ரசீதை இணைக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், புதுக்கோட்டை உட்பட, 16 மாவட்டங்களில் தேசிய மக்கள் தொகை பதிவுப் பணிகள் நடக்கின்றன. இதில், மத்திய அரசின் மக்கள் தொகை, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று, குடும்ப தலைவர், உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் விபரங்களை சேகரிப்பர். அத்துடன், ஒவ்வொருவரின் இரண்டு கைகளில் உள்ள விரல்கள், கண் புருவம், முழு உருவத்தை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வர்.
இந்த பதிவிற்கு பின், தேசிய மக்கள் தொகை பதிவு செய்வதற்கு ஆதாரமாக, குடும்பத்திற்கு ஒரு ரசீது வழங்கப்படும். அந்த ரசீதை பத்திரமாக வைத்திருக்க, தேசிய மக்கள் தொகை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில், ஒரே குடும்பத்தில் பல ரேஷன் கார்டுகள், ஒரு நபர் ரேஷன் கார்டுகள் வைத்திருப்போரை கண்டறிந்து, ஒரு நபர் கார்டு குடும்பத்துடன் சேர்க்கப்படுகிறது. இதனால், அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.மேலும், புதிய கார்டுகள் கேட்டு, வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிப்போர், இனி விண்ணப்பத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுக்கான ரசீது "ஜெராக்ஸ்' பிரதியை கட்டாயம் முக்கிய ஆவணமாக இணைக்கவேண்டும் என, உணவு பொருள் வழங்கல் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசு இது போன்ற முடிவை எடுத்துள்ளது. தற்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யும் 16 மாவட்டங்களில், இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின், 32 மாவட்டங்களிலும் இந்த உத்தரவு, அமலுக்கு வரும் என, சென்னையில் நடந்த வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தில், கமிஷனர் தெரிவித்தார், என்றார்.
No comments:
Post a Comment