தமிழகத்தை 100 சதவீத படிப்பறிவு கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி அமைச்சர் சிவபதி பேசியது:
தமிழகத்தில்தான் வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இதனால், ஏழைக் குழந்தைகளும் லேப்-டாப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இலவசப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், கலர் பென்சில்கள் என படிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.
நல்ல ஆசிரியர்:
நல்ல ஆசிரியர் என்பவர் பாடத்தைப் புரியவைப்பதோடு மட்டுமில்லாமல் வாழ்வியலையும் புரியவைப்பவர். அடுத்தத் தலைமுறையினருக்கு அடித்தளம் அமைக்கும் சமூக விஞ்ஞானி அவர். அதுபோன்ற நல்ல ஆசிரியர்களுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோர் நிலையில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும். கண்டிப்போடு ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர்களைப் பெற்றோர்களாக மாணவர்கள் நினைக்க வேண்டும். சென்னை, திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லங்களைப் புதுப்பிப்பதற்காக தலா ரூ.3 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா:
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பள்ளிகள், மாணவர்களுக்கு உதவும் வகையில் இ.எம்.ஐ.எஸ். (உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) என்ற முறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் குறித்த விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பதைக் கண்காணிப்பதோடு, ஆசிரியர்கள் தங்களுக்குள் எழும் சந்தேகங்கள் தொடர்பாகவும் இணையதளத்தில் விவாதிக்கலாம் என்றார் அவர்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி:
தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களையும் போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியராகப் பணியாற்ற இப்போது பெறும் கல்வியியல் பட்டம் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களது திறமையை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பணியிடை பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் வரவேற்றார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில கூடுதல் இயக்குநர் ஆர்.இளங்கோவன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால், அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் அ.முகமது அஸ்லம், சென்னை மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர்.
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நன்றி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், விருது பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்்
No comments:
Post a Comment