நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அந்தந்த மாநில தலைநகரங்களில் முதல்வர்களும் நாளை தேசிய கொடியேற்றுகின்றனர். சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா நாளை காலை தேசிய கொடியேற்றுகிறார். விழாவுக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை, போர் நினைவு சின்னம் அருகில் இருந்து போலீசார் அணிவகுத்து அழைத்து செல்கின்றனர். அதன்பின் உள்துறை செயலர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் ஆகியோரை தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி அறிமுகம் செய்து வைப்பார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, கோட்டை கொத்தளத்துக்கு சென்று தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார். அதன்பின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். நாடு முழுவதும் போலீஸ் உஷார்: சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளை மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில், பஸ், விமான நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள், ரயில்வே பாலங்கள், ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment