தேர்வு முடிந்த அரை மணி நேரத்திற்குள் கையால் எழுதப்பட்ட கேள்வி பதில்கள் ஜெராக்ஸ் தாள்கள் கடலூர் மைதானத்தில் கிடைத்ததால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்,2 கேள்வி பதில் ஜெராக்ஸ் தாள்களுடன் கடலூரில் நேற்று இரவு 7 மணியளவில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ரமேஷ்(26) என்பவர் ஆவேசமாக வந்தார். குரூப் 2 தேர்வு எழுதுவற்கு முன்னதாகவே பணத்திற்கு கேள்வி பதில்களை விற்றுவிட்டார்கள். டி.என்.பி.எஸ்.சி யை நம்பி கடுமையாக உழைத்து படித்து வந்த நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று கோபத்தோடு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, நான் எம்.காம் பட்டதாரி, குரூப் 2 தேர்வுக்காக இரண்டு ஆண்டுகளாக படித்துவந்தேன். கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நேற்று தேர்வு எழுதினேன். அதன் பின்னர் பண்ருட்டியை சேர்ந்த நண்பர் முருகனுடன் மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றேன். அப்போது மைதானத்தின் நடுவில் லைட் கம்பத்தின் அருகில் கையால் எழுதப்பட்ட குரூப்,2 கேள்வி பதில் ஜெராக்ஸ் தாள்கள் கிடந்தன. அதில் குரூப் 2 வில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இருந்தன, அதில் விடைகளும் அளிக்கப்பட்டிருந்தன. பணத்திற்காக குரூப்,2 கேள்வி தாள்கள் விற்கப்பட்டுள்ள மோசடித்தனம் நடந்துள்ளது. இதனால் உண்மையாக உழைத்து தேர்வு எழுதியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இந்த மோசடிக்கு தேர்வாணைய துறைத் தலைவர் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார். இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment