என்றும் கன்னி
-யுவகிருஷ்ணா
'அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ கற்றுக் கொண்டதே ‘தினத்தந்தி’யில்தான்.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே ‘தினத்தந்தி’ வாசகன். ‘கன்னித்தீவு’, ‘ஆண்டியார் பாடுகிறார்’, ‘சாணக்கியன் சொல்’, ‘குருவியார் பதில்கள்’ பகுதிகளில் தொடங்கியது என் வாசிப்பு.
தமிழர்கள் மட்டுமின்றி தமிழரல்லாதவர்களும் தமிழ் வாசிக்க, ‘தந்தி’யே நல்ல ஆசான். ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய கடினமான பணியை, just like that ஆக 75 ஆண்டுகளாக செய்துவருகிறது ‘தினத்தந்தி’.
‘நூறாவது நாள்’ படம் பார்த்து பதினான்கு பேரை கொலை செய்த பிரகாஷ், சென்னை நகரில் தலையில்லா முண்டம் வீதியுலா, ஆட்டோ சங்கர், ‘மாயாவி’ வீரப்பனில் தொடங்கி இன்றைய எடப்பாடி, ‘தெர்மாக்கோல்’ ராஜூ வரையிலும் ‘தினத்தந்தி’யின் வாயிலாகவே என் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரையிலும் ‘தினத்தந்தி’ இல்லாமல், காலை காஃபி கழுத்துக்குக் கீழே இறங்குவதில்லை.
இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவின் தலையெழுத்தே மாறப்போகிறது என்று கணித்தார் அய்யா ஆதித்தனார் அவர்கள். அந்தப் போரின் செய்திகளை தமிழர்கள் உடனுக்குடன் அறிந்துக் கொள்வது அவசியம் என்கிற உந்துதலாலேயே ‘தினத்தந்தி’, இதே நவம்பர் 1ஆம் தேதி, 1942ல் மதுரையில் பிறந்தது.
போர்ச்செய்திகளை பெரும் பணம் செலவு செய்து, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பெற்று சிறப்பாக வெளியிட்டார். தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள்கூட ‘தினத்தந்தி’ வெளியிடும் படங்களை பார்ப்பதற்காகவே, அந்த செய்தித்தாளை வாங்கத் தொடங்கினார்கள். சுருட்டப்பட்ட ‘தினத்தந்தி’யை கக்கத்தில் செருகியிருப்பவர்கள், அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்பட்ட காலம் ஒன்று உண்டு.
செய்திகளை செய்திகளாகவே தருவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை ‘தினத்தந்தி’யின் சிறப்பு. தமிழர் உரிமை என்கிற பாதையில் இதுவரை எப்போதுமே தடம் புரண்டதில்லை என்பது பெரும் சிறப்பு.
‘தினத்தந்தி’யை ஆளுங்கட்சி ஜால்ரா என்று ஏராளமானோர் விமர்சிப்பது உண்டு.
ஊடக உலகில் இருபெரும் பாணிகள்தான் உண்டு. ஒன்று, பிபிசி பாணி. மற்றொன்று, சிஎன்என் பாணி.
அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளை மக்களிடம் எளிமையாக பிரச்சாரம் செய்வது பிபிசி பாணி. அரசுடைய கொள்கைகளில் குறைகளை தேடிக்கண்டுபிடித்து, விமர்சிப்பது சிஎன்என் பாணி. முந்தையது அமைதியாக ஓடும் ஆறு என்றால், பிந்தையது சலசலத்து கரைகளை உடைத்து மீறும் காட்டாறு.
‘தினத்தந்தி’, பிபிசி பாணியை பின்பற்றும் ஊடகம் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகவே செய்திகளை வெளியிடும் என்று அந்தந்த சமகாலத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். உண்மையில் பிபிசி பண்புகளோடு செயல்படும் ஊடகங்களே, மிக நீண்ட காலக்கட்டத்துக்கு செயல்படக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. இன்று, இந்தியாவிலேயே நம்பர் ஒன் தனியார் தொலைக்காட்சியாக 25 வருடங்களாக கோலோச்சும் ‘சன் டிவி’யும் பிபிசி பண்புகளுடனேயே செயல்படுகிறது. ‘சன் டிவி’யை உற்றுக் கவனிப்பவர்கள், அது தூர்தர்ஷனின் நவீனவடிவ நீட்சியாகவே தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
சரி, சிஎன்என் பாணி ஊடகங்கள் தமிழில் எவை?
எவையெல்லாம் ‘தினத்தந்தி’, ‘சன் டிவி’க்கு போட்டி ஊடகங்களோ, அவை பெரும்பாலும் சிஎன்என் பண்புகளோடு செயல்படுபவை என்று யூகித்துக் கொள்ளலாம். இன்றைய ‘தினகரன்’ விதிவிலக்கு. அது பாதி பிபிசி, பாதி சிஎன்என்.
75 ஆண்டுகளாகவே ஆள்வோரோடு பகைத்துக் கொள்ளாமல் ‘தினத்தந்தி’ நடந்துக் கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டுகள் ‘தினத்தந்தி’க்கு மிகக்கடுமையான சோதனைக்காலம் என்றே சொல்லலாம். சினிமா ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு ‘தினத்தந்தி’ மீது சந்தேகம் உண்டு. அது தனக்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகம் என்றே கருதி வந்தார். ‘தினத்தந்தி’ குடும்பத்தார், கலைஞருக்கு விசுவாசமானவர்கள் என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘தினத்தந்தி’க்கு மாற்று இருந்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தில் ‘தந்தி’க்கு போட்டியாக அப்போது களத்தில் இருந்த ஊடகங்களை பெரியளவில் ஊக்குவித்தார்.
முதல்வருக்கு அத்தகைய உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், ‘தினத்தந்தி’ எப்போதும் போலவே அரசு செய்திகளுக்கும், ஆள்வோருக்கும் முக்கியத்துவம் தந்தே நடந்துக் கொண்டது. எல்லையில்லா அதன் வாசகப் பரப்பு, எத்தகைய சோதனைகளையும் வெல்லக்கூடிய வலிமையைப் பெற்றதாகவே இருந்தது.
எனினும்,
‘தினத்தந்தி’யின் அந்த பண்புகள், அதன் கிளை நிறுவனங்களிடம் - குறிப்பாக தந்தி டிவி - இருப்பதாக தெரியவில்லை. சிஎன்என் பாணி பரபரப்புச் செய்திகளுக்கு, அவர்களது காட்சி ஊடகம் முக்கியத்துவம் கொடுப்பதாகதான் தோன்றுகிறது.
என்னதான் ‘தினத்தந்தி’யின் வாசகனாக, உபாசகனாக, ரசிகனாக இருந்தாலும், இன்று அந்த நாளிதழுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கும் ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளி, ஞாயிறு இணைப்பிதழ்களுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால் ‘தினத்தந்தி’, எனக்கும் தொழில்ரீதியான எதிரிதான். வாசகனாக இல்லாமல், போட்டியாளர் என்கிற முறையில் அவர்களுடைய சினிமா செய்திகள், ஞாயிறு இணைப்பிதழ் தயாரிப்புகளை இப்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மற்ற போட்டி ஊடகங்களை காட்டிலும், ‘தினத்தந்தி’ என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என்னுடைய இரத்த அழுத்தத்தை எகிறவைக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல, செய்தி ஊடகங்கள் அத்தனைக்குமே ‘தினத்தந்தி’தான் ஸ்போர்ட்டிவ்வான ஒரே போட்டியாளர்.
அதனால்தான் முன்பை காட்டிலும் ‘தினத்தந்தி’யை வெகுநெருக்கமாக இப்போது உணரமுடிகிறது. சினிமா புளோஅப்புகளுக்கு, ‘தினத்தந்தி’யின் சினிமா எடிட்டர் தரக்கூடிய ஃபுட்நோட் ஓர் இதழியல் அற்புதம். அதற்கு ஒரு வரியில் அவர்கள் தரக்கூடிய தலைப்பும் அபாரம். சனிக்கிழமைகளில் அவர்கள் வெளியிடும் பிரபலங்களின் தொடர் (இப்போது ஏவிஎம் சரவணன் பிரமாதமாக எழுதுகிறார்), உலகசினிமா குறிப்புகள், ஞாயிறுகளில் வெளியிடும் வட இந்திய நடிகை பேட்டி, தொடர்கதை, சிறுகதை, அழகுக் குறிப்புகள், சாமானியர்களின் சிறப்புப் பேட்டி என்று எதையுமே தவறவிடுவதில்லை.
குறிப்பாக ‘தினத்தந்தி’ சிறுகதைகளுக்கு நானும், ‘குங்குமம்’ ஆசிரியர் சிவராமனும் பெரும் ரசிகர்கள். திங்கள் காலையிலேயே, முந்தைய நாள் சிறுகதை பற்றிதான் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் புத்திசாலி மருமகள், பாசமான மாமியார் ரக சிறுகதைகள்தான். எனினும், இலக்கியம் படைக்கக் கூடிய எழுத்தாளர்களிடம் தென்படக்கூடிய நரித்தந்திரமான எழுத்து பாணி, ‘தினத்தந்தி’யில் சிறுகதை எழுதக்கூடிய வாசக எழுத்தாளர்களிடம் கொஞ்சம்கூட இருக்காது. ரஜினியின் மொழியில் சொல்வதென்றால் சமூகத்துடைய நிஜமான 'imporant topic addressed' என்பது ‘தினத்தந்தி’யின் 250, 300 வரி சிறுகதைகளில்தான் வெளிப்படுகிறது.
யோசித்துப் பார்த்தால் ‘தினத்தந்தி’யிடம் வெளிப்படும் வெள்ளந்தித் தனமே அதன் பலம். இதற்காக தந்தியை தயாரிப்பவர்கள் அறிவுரீதியாக எளிமையானவர்கள் என்று அர்த்தமல்ல. மிக ஆழ்ந்த வாசிப்பும், சமூகம் குறித்த பரவலான அவதானிப்பும் மிகுந்தவர்களே இவ்வளவு அப்பாவித்தனமான எழுத்தை வெளிப்படுத்த முடியும்.
இவை மட்டுமல்ல. ‘தினத்தந்தி’யின் மகத்தான வெற்றிக்கு காரணம். அதனுடைய சாதுர்யமான நிர்வாகம். மேனேஜ்மேண்ட் புத்தகம் எழுதுமளவுக்கு நிறைய இருக்கிறது என்றாலும், அவை அவ்வளவாக வெளியில் பேசப்படுவதில்லை. ஏனோ, ஊடக உலகத்தில் இரும்புத்திரை நாளிதழாக, மற்றவர்களிடமிருந்து ‘தினத்தந்தி’ தன்னை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்பதால் இருக்கும்.
1963ல் இதே நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.
அய்யா ஆதித்தனார் அவர்கள், கோவைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார். மறுநாள் வெளியாக வேண்டிய ‘தினத்தந்தி’யின் தலைப்புச் செய்தியை சரிபார்த்துவிட்டு, செய்தி ஆசிரியர் நாதன் அவர்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு இரவு ரயில் ஏறிவிட்டார்.
எந்த ஊருக்கு சென்று இறங்கினாலும் அங்கே ‘தினத்தந்தி’யை வாங்கிப் புரட்டுவது அய்யாவின் வழக்கம். கோவையில் காலை இறங்கியதுமே ‘தந்தி’ வாங்கி புரட்டுகிறார். இவர் குறிப்பிட்ட தலைப்புச் செய்தி இல்லை. மாறாக அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுடப்பட்ட செய்தி, தலைப்பில் வந்திருக்கிறது.
சென்னை திரும்பிய அய்யா, ஒரு விசாரணைக் கமிஷன் நடத்துகிறார். அவர் குறிப்பிட்ட தலைப்பு வராதது குறித்து, மிகவும் கோபமாக இருக்கிறார் என்றே ஆசிரியர் குழுவினர் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாப் பழியையும், அப்போது நிர்வாகத்துக்கு வந்திருந்த இளைஞரான சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்.
நடந்தது இதுதான்.
நாளிதழ் அச்சாகி, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில் டெலக்ஸில் ஒரு செய்தி, சர்வதேச செய்தி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு நள்ளிரவில் கிடைக்கிறது. அதை நாதன் அவர்கள் கவனித்து, உடனடியாக சிவந்தி ஆதித்தனுக்கு தகவல் தெரிவிக்கிறார். வெளியூர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டிகளை வழியில் மடக்கி, அந்த பேப்பரையெல்லாம் திரும்பப் பெறுகிறார்கள். கென்னடி சுடப்பட்ட செய்தி, நாதன் அவர்களால் அவசர அவசரமாக எழுதப்பட்டு தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டு மீண்டும் ‘தினத்தந்தி’ அச்சாகிறது. வெளியூர் பதிப்புகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார் என்பதால், அய்யா ஆதித்தனாருக்கு சொல்ல முடியவில்லை.
என்னவெல்லாம் நடந்தது என்பதை முழுமையாக விசாரித்து அறிந்த ஆதித்தனார், அன்று இரவில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஊக்கத்தொகை கொடுத்தார்.
அன்று ‘தினத்தந்தி’ செய்த சாதனை மிகப்பெரியது. ஏனெனில், கென்னடி சுடப்பட்ட செய்தியை முதன்முதலாக வெளியிட்ட ஒரே இந்திய செய்தித்தாளாக ‘தினத்தந்தி’ மட்டுமே இருந்தது.
‘தினத்தந்தி’யின் மகத்தான பவளவிழா வெற்றிக்குப் பின்னால், இதுபோல நாம் அறியாத கதைகள் ஆயிரம் உண்டு. நாதன், சிவந்தி ஆதித்தன் போல பல நூறு பேரின் சமயோசிதமான, தைரியமான நடவடிக்கைகள் ஏராளம்.
என் வயதில் இருமடங்கான பிரியமான எதிரிக்கு பவளவிழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
No comments:
Post a Comment