பொறியியல் கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்த பாடங்களுக்கான அரியர் தேர்வு எழுத கூடுதல் அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தை 2017- ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழகம், குறிப்பிட்ட கால அவசாத்துக்குப் பின்னர் அரியர் தேர்வு எழுத முடியாத வகையில் புதிய நடைமுறையையும் அறிமுகம் செய்தது.
இதன் காரணமாக, அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தேர்ச்சி பெறாத இணைப்புக் கல்லூரி இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள், தவறிய பாடங்களுக்கான தேர்வை மீண்டும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் அரியர் தேர்வு எழுத கூடுதல் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அளித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையை ஏற்று இந்தக் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் 2001-2002 கல்வியாண்டு முதல் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அரியர் தேர்வுகளை எழுதலாம்.
இவர்கள் 2018 பிப்ரவரி மற்றும் 2018 ஆகஸ்ட் பருவத் தேர்வுகளில் மட்டும் அரியர் தாள்களை எழுத அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். பதிவு முடிந்தவுடன் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்படும். இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu, coe1.annauniv.eduஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment