தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை கணினிமயமாக்கம் அவுட்சோர்சிங் முறையில் செய்யப்பட்டதில் 70 சதவீதம் குளறுபடி நடந்துள்ளது. இதனால் ஓய்வூதிய பலன்கள் பெறும் போது சிக்கல் ஏற்படும் என ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுத்துறைகளில் அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை, 7 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அரசு ஊழியர்களின் பணி பதிவேடு என்பது, அவர்களின் உயிர்நாடி என கருதப்படுகிறது. ஒவ்வொருவருடைய பணி நியமனம் முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரை உள்ள அனைத்து விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பல்வேறு காரணங்களால் பேப்பரில் உள்ள பணி பதிவேட்டை பராமரிப்பதில், சிக்கல் இருந்து வருகிறது. குறிப்பாக, ஒருசில அலுவலகங்களில் உள்நோக்கத்தோடு பணி பதிவேடுகள் திருடப்படுவதுடன், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இதுபோன்ற குறைபாடுகளை களைய, அனைத்து பதிவுகளும் ஆன்லைனுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன் ஒருபகுதியாக, ஊழியர்களின் அனைத்து விவரங்களும் கணினிமயமாக்கும் நடவடிக்கை கடந்த சில மாதங்களாக கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது அவுட்சோர்சிங் முறையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்களுக்கு அனுப்பி, சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கணினிமயமாக்கப்பட்ட 70 சதவீத பதிவுகள் குளறுபடிகளுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது: பணி பதிவேடுகள் கணினிமயமாக்கும் பணிகள் முற்றிலும் அனுபவமில்லாத, கல்லூரி மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தெந்த விவரங்களை எங்கு குறிப்பது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இருப்பதை அப்படியே காப்பியடிக்கும் வேலையை கூட, சரிவர மேற்கொள்ளவில்லை. கணினிமயமாக்கும் பணியை பலகோடி ரூபாய்க்கு அவுட்சோர்சிங் முறையில் மேற்கொண்டிருப்பது அபத்தமானது. அரசு ஊழியர்களையே தங்களது பதிவுகளை முறைப்படுத்தி கொடுக்க உத்தரவிட்டிருந்தால், ஒரு சில மணிநேரங்களில் பணிகள் முடிந்திருக்கும். துல்லியமாகவும் இருந்திருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளில், பெரும்பாலான இடங்களில் தவறு நடந்துள்ளது. குறிப்பாக, ஊழியர்கள் பணியில் சேர்ந்த தேதி, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேதி, பயிற்சி மேற்கொண்ட நாள் போன்ற தேதிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தகுந்த இடங்களில் குறிப்பிடப்படவில்லை.
கணினிமயமாக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, பணி பதிவேட்டின் வரைமுறை கூட தெரிந்திருக்கவில்லை. கணினியில் ஏற்றி சரிபார்க்க அனுப்பப்பட்டதில் கூட, பலரது பதிவேடு காணாமல் போயிருந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவரது விவரங்கள் அனைத்தும் கணக்கு தணிக்கை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். இதில், அவர்களின் பணி பதிவேடுகள் தான் முக்கிய இடம்பெறும். அவற்றில் குளறுபடிகள் இருந்தால், ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளது.
இப்படிப்பட்ட அதிமுக்கியமான பதிவேடுகளை குளறுபடிகளுடன் மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, குளறுபடிகளை முழுமையாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment