சாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவை இணைந்து, ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்தது.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் சாரணர் அமைப்பு நல்ல முறையில் இயங்கி வருகிறது. அதற்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி போதாது என்று கோரிக்கை ரூ.2 கோடியில் வைப்புத் தொகை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியையும் சாரணர் இயக்கத்துக்கு பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். சாரணர் இயக்கத்துக்காக திருவல்லிக்கேணியில் ஒரு இடம் ஒப்பந்த அடிப்படையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் 1996ம் ஆண்டுக்கு பிறகு புதுப்பிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்து சாரணர் இயக்கத்துக்கு திரும்பவும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆலந்தூரில் இந்த இயக்கத்துக்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த இடம் தற்போது போலீசின் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீ்ட்டு மீண்டும் சாரணர் இயக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர,போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இதுவரை 73 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். விரைவில் 412 மையங்களில் பயிற்சி தொடங்கும். பேரிடர் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவிக்கும் வகையில் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையின் போது மாணவ மாணவியரின் புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment