தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(சனிக்கிழமை) சென்னையில் கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை போலீசார் மிரட்டுவதாக தகவல் வந்துகொண்டு இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அழைத்து பேசவேண்டும். பேசவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி 22-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பிறகும் கோரிக்கைகள் புறந்தள்ளும் பட்சத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த மாநாடுகளை நடத்த உள்ளோம். இறுதியாக செப்டம்பர் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது என்று திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஜெ.கணேசன் தெரிவித்தார். பெ.இளங்கோவன் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment