ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே செப்டம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்ற அடுத்த அதிரடி அறிவிப்பு விரைவில் வரும் என்று உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி கூறினார்.குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்துபவர்கள், தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கும் (மாதம் ₹8,334 சம்பளம் வாங்குபவர்கள்) மேல் உள்ளவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது.
ஆனாலும், தமிழக அரசுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஆனாலும், பொதுமக்களிடம் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றி, ரேஷன் பொருட்களை நிறுத்திவிடலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, உணவு பொருள் வழங்கல் துறையின் உயர் அதிகாரி கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஆதார் கார்டு எண் இணைக்கும் பணி நடைபெற்றது. ஆதார் எண் அடிப்படையில் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு ஆதார் கார்டு அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கார்டு வழங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்ட் விரைவில் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சுமார் 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
இந்த மாதம் இறுதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் செப்டம்பர் 1ம் தேதி முதல், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும். ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், அது போலி கார்டுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment