அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment